2022 ம் ஆண்டிற்கான  எஸ்ஆர்எம்  தமிழ்ப்பேராயத்தின்  விருதுகள் - தமிழ்ப்பேராய புரவலர் மற்றும் எஸ்ஆர்எம் வேந்தர்

டாக்டர் பாரிவேந்தர் எம். பி. வெளியிட்டார்

 


 

 2022 ம் ஆண்டிற்கான  எஸ்ஆர்எம்  தமிழ்ப்பேராயத்தின்  விருதுகள்  பற்றிய பட்டியலை தமிழ்ப்பேராயத்தின் நிறுவனரும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் வேந்தருமான டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் எம். பி. இன்று வெளியிட்டார்.

 

 

சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன  வடபழனி வாளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்  தமிழ்ப்பேராயத்தின்  விருதுகள்  பற்றிய பட்டியலை வெளியிட்டு 

டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் கூறியதாவது :



அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலகமுழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது தான் எஸ்ஆர்எம்தமிழ்ப்பேராயம்.

 

 தமிழகம் எங்குமுள்ள சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், அரசுசார் தமிழமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர்களைக் கொண்ட குழுக்களின் அறிவுரைகளின்படி தமிழ்ப்பேராயம் இயங்குகிறது. இது விருப்பு, வெறுப்பற்ற நடுநிலையான செயல்பாடுகளைக் கொண்ட அமைப்பாகும்.

 

தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டுமுதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இதுவரையில் 2 கோடியே 20 இலட்சம் அளவிலான பரிசுத் தொகை இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் 89 படைப்பாளர்கள் விருது பெற்றுள்ளனர்.  அவர்களில் அமெரிக்கா, கனடா, இலங்கை, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா  ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் படைப்பாளர்களும் அடங்குவர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளமை நோக்குதற்குரியது. தமிழ்ப்பேராய விருதுகள் உரிய தகுதிவாய்ந்தோர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் தமிழ்ப்பேராய விருதாளர்கள் அதன்பிறகு சாகித்திய அகாடெமி விருதுகளையும் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகளையும் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளையும் பெற்றுள்ளமை குறிக்கத்தக்கது.

 

 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு பற்றிய தகவல் ஏழு மாதங்களுக்கு முன்பு  வெளியிடப்பட்டு, 407 பரிந்துரைகள் வரப்பெற்றன. அவற்றுள் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க, ஏற்கெனவே இரண்டு நிலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக ஓய்வுபெற்ற மாண்புமிகு நீதியரசர் க. ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில்   பேராசிரியர்  இரா. சந்திரசேகரன்,முனைவர் என். சி. ராஜாமணி, எழுத்தாளர் அமிர்தம் சூர்யா, முனைவர் ஆதிரா முல்லை ஆகியோரை உறுப்பினர்களாக  கொண்ட  அறிஞர் குழுவினர் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

இந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன், எஸ்ஆர்எம்  தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர்  கரு. நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

விருதுகள் பற்றிய பட்டியல் விவரம்  வருமாறு :

 

 

விருதின் பெயர் நூல் / விருதாளர் பெயர்

 

1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது: வடசென்னை -நிவேதிதா லூயிஸ் 

 

2.பாரதியார் கவிதை விருது: வேட்டுவம் நூறு - மௌனன் யாத்ரிக்கா 

 

3.அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது: 1, உதை பந்து -ஏ. ஆர். முருகேசன், 2, மலைப்பூ -விழியன் 

 

4.ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது : யாதும் ஊரே - சித்தார்த்தன் 

 

5.ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது :தமிழர் மருத்துவம் -முனைவர் பால. சிவகடாட்சம் 

 

6.முத்துத்தாண்டவர் தமிழிசை விருது : இந்த விருதுக்குரிய தகுதியான பரிந்துரைகள் கிடைக்கபெறவில்லை 

 

7.பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது : கவிதை மரபும் தொல்காப்பியமும் -  பேராசிரியர் இராம. குருநாதன் 

 

8.முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது: 1, தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்- கருவூர் கன்னல், 2, உலகத்தலைவர் அண்ணல் அம்பேத்கார் -குடந்தை பாலு 

 

9.சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது : மணல் வீடு - மு. அரிகிருஷ்ணன் 

 

10.தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது: புதுவை தமிழ்ச்சங்கம் - முனைவர் வி. முத்து 

 

11.அருணாசலக் கவிராயர் விருது : 

 இந்த விருதுக்குரிய தகுதியான பரிந்துரைகள் கிடைக்கபெறவில்லை 

 

12.பாரிவேந்தர் பைந்தமிழ் விருது: பேராசிரியர் -சிற்பி பாலசுப்ரமணியம்



Share to All

0 comments:

 
Top