அனைவருக்கும் வணக்கம்.

பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம்என்னும் அமைப்பு தொடங்கப்படும் இந்நாள் என் வாழ்வின் பொன்னாள். எத்தனையோ கல்வி நிறுவனங்களையும், அமைப்புகளையும் நான் உருவாக்கியிருக்கிறேன். அப்போது கிடைத்த மனநிறைவு, மகிழ்ச்சியைவிட இந்தப் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் தொடங்கும்போது நான் அடையும் மகிழ்ச்சியும், மனநிறைவும் எல்லையற்றவை.

தொன் மொழி, செம்மொழி, உலகச் செம்மொழிகளில் தனித்தன்மை இழக்காமல் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மொழி, பல்வேறு மொழிக்கலப்பு நிகழ்ந்தபோதிலும் தன் அடையாளத்தை இழக்காத மொழி, பண்டை இலக்கியங்களில் கடவுளர் புராணங்களைச் சொல்லாமல் மானுடனின் அக, புற வாழ்க்கைகளை எடுத்தியம்பிய மொழி எம் மொழி தமிழ்மொழி.

ஒரு மனிதன் தன் அடையாளத்தைத் தன் மொழியிலிருந்தே பெறுகிறான். நானும் அப்படித்தான். என் அடையாளம் என் மொழி. அத்தகைய தமிழ் மொழிக்குப், பெரும் மணற்பரப்பில் ஒரு சிறு துகளாய் நின்று நானும் தொண்டாற்ற விரும்புகிறேன். தமிழன்னை என்னை வளர்த்தாள். நான் அத் தமிழன்னைக்கு என்னையே தாரைவார்க்கிறேன்.

உலகத்தின் தலைவர்கள் அனைவரும் அண்ணாந்து பார்க்கும் ஒரே சக்தி மாணவர் சக்தி. ஒன்றிணையும் மாணவ சக்திக்குள் ஓராயிரம் சூரியனின் வெப்பம் தகிக்கும். வெப்பத்தை உள்வாங்கி நல்லனவற்றிற்குப் பயன்படுத்துவது சமூகத்தின் கடமை. நல்ல வழிகாட்டிகளே நல்ல மாணவ சமுதாயத்தைப் படைக்க முடியும்.

இதோ என் மூச்சுக் காற்றில் கலந்த தமிழையும் என் உயிரில் கலந்த மாணவ சக்தியினையும் ஒன்றிணைக்க முயல்கின்றேன். அந்த முயற்சியே பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றமாய் உங்களின் முன் ஒளிர்கிறது. நிலையான தீபமாய், தமிழையும் தமிழ்ச் சமூகத்தையும் வழிநடத்தும் சுடரொளியாய் மாற்றவேண்டியது உங்கள் பொறுப்பு.

பாண்டியர் காலத்தில் தோன்றிய மூன்று தமிழ்ச் சங்கங்களும், பாண்டித்துரைத்தேவர் காலத்தில் தோன்றிய நான்காம் தமிழ்ச் சங்கமும் வரலாற்றின் வேர்கள். நான் தொடங்கியுள்ள தமிழ்ப்பேராயம் என்னும் அமைப்பு இனி வரும் வரலாற்றின் நீண்ட பக்கங்களில் ஐந்தாம் தமிழ்ச்சங்கமாக நிலைபெறும் என்று நம்புகிறேன். அத்தகைய பல பணிகள் தமிழ்ப்பேராயத்தின் வழியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகம் போற்றும் அத்தகைய தமிழ்ப்பேராயத்தின் ஒரு பிரிவாய்ப் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் என்னும் இவ்வமைப்பு உருவாக்கம் பெற்றுள்ளது. இம் மாணவர் மன்றம் உங்களுக்கானது. உங்களது தமிழ்த்திறன்கலையும் கலைத்திறன்கலையும் அரங்கேற்றுவதற்கான மேடைதான் இந்த மன்றம். நீங்கள் இல்லையென்றால் இம் மன்றம் இல்லை. கைகோத்து அழைத்துச்சென்று உலகம் போற்றும் மாணவர் மன்றமாக மாற்றிக்காட்டுங்கள்!. புதிய வரலாற்றைப் படையுங்கள்!!

இம் மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துகளையும் பதிவுகளையும் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த முகநூல் கணக்கில் இம் மன்றத்தின் தொடக்க விழாவில் முதல் பதிவாக இந்தப் பதிவினை இடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

என்றும் அன்புடன்
 தா.இரா. பாரிவேந்தர்

03.09.2015

https://www.facebook.com/பாரிவேந்தர்-மாணவர்-தமிழ்-மன்றம்-495221680637452/timeline/










Share to All

0 comments:

 
Top